உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் 2023 9, 10, 11 ம் திகதிகளில் திருகோணமலையில் Mc Heizer உள்ளரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது . இந்த போட்டியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து பகுதிகளில் இருந்தும் 1000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பார்வையாளர்கள் என கலந்து கொண்டிருந்தார்கள்.அத்துடன் இந்த போட்டியில் இலங்கையின் ஏனைய மாகாணப் போட்டியாளர்களும் பங்குபற்றும் வகையில் ஒரு போட்டியும் இடம்பெற்றிருந்தது.
இந்த போட்டிக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பான்ட் வாத்திய அணியினர் சகிதம் அழைத்து வரப்பட்டிருந்ததுடன் , திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு பிரசன்ன ஃபிரஹ்மனகே , இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் றொகான் டி சில்வா அவருடன் இணைந்த உயர் நிலை நிர்வாக உறுப்பினர்கள், உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஸ்தாபகர் கந்தையா சிங்கம் , உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் இலங்கைக்கிளைதலைவர் கமலன் மற்றும் செயலாளர் பிரின்ஸ் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள்.
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் மத்திய குழுவின் ஆலோசனைக்கமைய WTBF இன் திருகோணமலை மாவட்ட கிளையின் வழிநடத்தலில் ஓர்போட்டி ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டு அவர்களின் முழுமையான ஏற்பாட்டில் இந்த போட்டிகள் யாவும் நடைபெற்றிருந்தது.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து பகுதிகளிலிருந்தும்வருகை தந்திருந்த போட்டியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உணவு வசதிகள் போன்றவையும் இயன்றவரை மிகச் சிறப்பாக அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போட்டியின் பங்கு பற்றிய வீரர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்ததுடன் போட்டிகள் யாவும் கால் இறுதி ஆட்டத்திலிருந்து மிகமிக விறுவிறுப்பான போட்டிகளகவும் தரம் நிறைந்ததாகவும் காணப்பட்டது.
2013 இல் சுவிஸ் நாட்டில்ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை 2014 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்த வகையில் இந்த போட்டிகளை வருடா வருடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது .
அந்த வகையில் இந்த வருட போட்டிகள் மிக மிக சிறப்பாக, நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு , ஓர் படிமுறை வளர்ச்சியில் சிறப்பு நிலையை அடைந்திருப்பதை காணமுடிந்தது.
இந்த போட்டியினை போட்டிக் குழுவின் தலைவர் ஜெயசீலன் இப்போட்டிக்குழுவின் செயலாளர் DR நிலோஜன் மற்றும்அவர்களுடன் இணைந்த போட்டிக் குழு உறுப்பினர்கள் இளந்தலைமுறையின் நிர்வாக செயற்பாட்டாளர் கீர்த்தனன் , போட்டிக்குழுவின் மாவட்ட இணைப்பாளர்கள் என அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு
இத்தகைய ஓர் சிறப்பான போட்டி நடந்தேறுவதற்கு மிகவும் காத்திரமாக உழைத்திருந்தார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் இப்போட்டி நடந்தேறுவதற்கு தம்மால் இயன்ற முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள் என்பதுடன்
இப்போட்டியின்சிறப்பு நிலை பற்றி தமது இணையப்பக்கம், முகப்புத்தகம் போன்றவற்றிலும் வெளிப்படுத்தியிருந்ததுடன்
இலங்கையின் முன்னணி அரச ஊடகங்களும் இது தொடர்பாக செய்திகளை வழங்கி இன்னும் சிறப்பான ஊக்குவிப்புக்களை தந்திருந்தமை மிகவும் வரவேற்புக்குரியதாக அமைந்திருந்தது.
திருகோணமலை மாவட்ட பொலிஸ் திணைக்களமும் இப்போட்டியின் பல்வேறு பரிணாமங்களில் தமது பங்களிப்பை நல்கி உதவியளித்திருந்தார்கள்.
அதேபோன்று யாழ் மாவட்ட பட்மின்ரன் சங்க நிர்வாகத்தினரும் நேரடியாகவே வருகை தந்து போட்டிகள் சிறப்பாக நடந்தேற தமது ஒத்துழைப்பினையும் நல்கியிருந்தார்கள்.
இவ்வகையில் இப்போட்டியின் முழுமையான வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் சிறப்பான பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை தெரிவித்துக் கொள்கின்றது.
அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள WTBF இன் 9 வது உலககிண்ணப் போட்டிகள் இன்னும் சிறப்பாக நடந்தேறுவதற்கு ஓர் அடித்தளமிட்ட போட்டிகளாக இவ்வருட வடக்கு கிழக்குப் போட்டிகள் அமைந்திருப்பதை அவதானிக்கவும் முடிகிறது.
நிர்வாகம்
WTBF
2023-06-29